கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு தழுவிய அளவில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-04-07 06:12 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கெஜ்ரிவால் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கடந்த 31ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நாடு தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உண்ணாவிரதம் இருக்குமாறு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு காலை 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்