அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குல்தீப் குமாரை ஆதரித்து கெஜ்ரிவால் மனைவி வாகன பேரணி நடத்த உள்ளார்.;

Update: 2024-04-27 07:48 GMT

புதுடெல்லி,

டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் மே 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாகெஜ்ரிவால்  டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி சுனிதா கெஜ்ரிவால் இன்று கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குல்தீப் குமாரை ஆதரித்து வாகன பேரணி நடத்த உள்ளார்.

இந்நிலையில், கிழக்கு டெல்லியில் உள்ள லட்சுமி நகரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். குமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டதில் ஆம் ஆத்மி கட்சியினர் பதாகைகளை ஏந்தியபடி "கைதுக்கு பதிலடி மக்களின் ஓட்டு தான்" என்ற முழக்கத்தை எழுப்பினர்.

மேலும் பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் மற்றும் கெஜ்ரிவாலின் கைதுக்கு தகுந்த பதிலடி கொடுக்க டெல்லி மக்கள் தயாராக உள்ளனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறியுள்ளார். சுனிதா கெஜ்ரிவால் வாகன பேரணி நடத்த உள்ள கிழக்கு டெல்லியின் ஒரு பகுதியில் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்