ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குலாப் சிங் யாதவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-23 07:17 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

அதேவேளை இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குலாப் சிங் யாதவ் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் ஆவார். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்