இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில், ஆம் ஆத்மி கட்சி வழக்கு

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2023-04-07 18:45 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆளும் பா.ஜனதா காய்நகர்த்தி வருகிறது. அதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த நிலையில், மீண்டும் மீட்டெடுத்து ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இதுபோல் 'கிங் மேக்கர்' என்று வர்ணிக்கப்படும் வரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமியும் பம்பரம்போல் சுழன்று இந்த முறை எப்படியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறார். கர்நாடகத்தில் மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்ட இந்த 3 கட்சிகளைத் தவிர தேசிய அரசியலில் தற்போது கவனம் ஈர்த்து வரும் ஆம் ஆத்மி கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கர்நாடக ஆம் ஆத்மி கட்சி சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது

இதுபற்றி கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்வீனர் பிருத்வி ரெட்டி கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான வாக்குகளை கைப்பற்றி இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையமே சாட்சி.

அப்படி இருந்தும் இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிக்க மறுத்து காலதாமதம் செய்து வருகிறது. இதனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நிருபர்களிடம் கூறுகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார். அதனால் உடனடியாக ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தலைமை தேர்தல் கமிஷனருக்கு உத்தரவு

அதை ஏற்றுக் கொண்ட கர்நாடக ஐகோர்ட்டு வருகிற 13-ந் தேதி அல்லது அதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கி ஆணையிட வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனருக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் தலைமை தேர்தல் கமிஷனரின் பிரதிநிதி, வருகிற 11-ந் தேதி ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கி ஆணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்