பெங்களூருவில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை

பெங்களூருவில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-06-18 20:18 GMT

பெங்களூரு:

காதலுக்கு எதிர்ப்பு

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் திபேந்திர குமார். இவர் பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தாரா என்ற இளம்பெண்ணும் வேலை செய்து வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே தாராவின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தாராவை, அவரது பெற்றோர் மேற்கு வங்காளத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் என திபேந்திர குமார் சந்தேகித்தார். இதையடுத்து அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் கடந்த வாரம் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தற்கொலை

இதற்கிடையே தாரா, பெங்களூருவில் தான் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது பெற்றோரிடம் கோபித்து கொண்டு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். மேலும் அவருக்கு தனது காதலன் உயிரிழந்தது குறித்து தெரியவந்தது. இதையடுத்து தாரா, காதலன் இறந்த சோகத்தால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் தனது குடியிருப்பில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மாரத்தஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த திபேந்திர குமார் மற்றும் தாரா ஆகியோர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அவர்கள் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்