காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் மருத்துவ செலவை அரசே ஏற்கும் பொன்னண்ணா எம்.எல்.ஏ. தகவல்
காட்டுயானை தாக்கி படுகாயமடைந்த கூலி தொழிலாளியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று பொன்னண்ணா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
குடகு-
காட்டுயானை தாக்கி படுகாயமடைந்த கூலி தொழிலாளியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று பொன்னண்ணா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
காட்டுயானை தாக்குதல்
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலிபெட்டாவை சேர்ந்தவர் பாபி. கூலி தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் மஸ்கல் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து வந்த காட்டு யானை, கூலி தொழிலாளிகளை துரத்தியது. இதில் சக கூலி தொழிலாளிகள் தப்பியோடிவிட்டனர். பாபி மட்டும் சிக்கி கொண்டார். அவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய காட்டுயானை காலால் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.
சக கூலி தொழிலாளிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மைசூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த காட்டு யானை தாக்குதல் குறித்து விராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.பொன்னண்ணாவிற்கு தகவல் கிடைத்தது. அவர் உடனே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, கூலி தொழிலாளி பாபியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மருத்துவ செலவு
மேலும் பாபியின் மருத்துவத்திற்கான செலவை அரசே ஏற்பதாக கூறினார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு ெகாண்ட, அவர் காட்டுயானைகள் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் காடுகளை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். புதிய அரசு ஆட்சி அமைந்ததும், அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் யானை தாக்கியதில் காயமடைந்த கூலி தொழிலாளியை நேரில் சந்திப்பதற்காக காங்கிரஸ் பிரமுகரான சங்கேத் பூவய்யாவை அனுப்பி வைத்தார். சங்கேத் பூவய்யா ஆஸ்பத்திரிக்கு சென்று கூலி தொழிலாளியை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அப்போது சங்கேத் பூவய்யா, கூலி தொழிலாளிக்கு ஆறுதல் கூறியதுடன் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று உறுதி அளித்தார்.