ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை பெண் அதிகாரி கைது
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை பெண் அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
குடகு-
ரூ.50 ஆயிரம் லஞ்சம்
குடகு மாவட்டம் மடிகேரியில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூர்ணிமா. இந்த நிலையில் பூர்ணிமா, வோடேகாடு பகுதியில் வனக்காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக ஆவணத்தை உருவாக்கி, அந்த வனக்காவலருக்கு வழங்கப்படும் மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்தை தனக்கு கொடுக்கும்படி தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த அதிகாரியை பூர்ணிமா அவதூறாக திட்டியும், பொய் வழக்கு போட்டு பணி இடைநீக்கம் செய்வதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மடிகேரி வனத்துறை சார்பில் நடந்த ரூ.1.60 லட்சம் செலவில் 2 பணிகள் நடந்தது. அதில் ரூ.50 ஆயிரத்தை தனக்கு லஞ்சமாக கொடுக்கும்படி கீழ் அதிகாரியிடம் பூர்ணிமா கேட்டுள்ளார்.
பெண் அதிகாரி கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த அதிகாரி, இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசாரின் அறிவுரையின்பேரில் அந்த அதிகாரி, பூர்ணிமாவை சந்தித்து பணம் கொடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மடிகேரி வனத்துறை அலுவலகத்தின் முன்பு வைத்து ரூ.50 ஆயிரத்தை அந்த அதிகாரி, பூர்ணிமாவிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பூர்ணிமா வாங்கினார்.அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார், பூர்ணிமாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.