வீட்டை இடித்த காட்டுயானை; கிராம மக்கள் பீதி

மடிகேரி அருகே, காட்டுயானை வீட்டை இடித்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. காட்டுயானையின் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.;

Update: 2022-08-26 14:58 GMT

குடகு;

ஒற்றை காட்டுயானை

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா மதே பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பெட்டத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகளான காட்டுயானை, புலி, சிறுத்தை போன்றவை இரைதேடி கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

மேலும் அவை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை கிராமத்தைச் சேர்ந்த வெள்ளப்பா என்பவரின் வீட்டிற்கு பின்புறம் இருந்த விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்தும், பிடுங்கியும் நாசப்படுத்தியது.

வீட்டின் சுவரை இடித்து

இதையடுத்து அந்த காட்டுயானை, வெள்ளப்பாவின் வீட்டின் பின்புறம் இருந்த சுவரை இடித்தது. இதில் யானையை பாா்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அலறி அடித்தபடி வீட்டில் இருந்த வெளியே ஓடிவந்தனர். மேலும் அந்த காட்டுயானை வெள்ளப்பாவுக்கு சொந்தமான குடோனையும் சேதப்படுத்தியது.

இதையடுத்து அந்த ஒற்றை காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பல லட்சம் ரூபாய் நஷ்டம்

வனத்துறையினரிடம் அந்த பகுதி கிராம மக்கள் காட்டுயானைகளின் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நிரந்தரமாக அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு ேகாரிக்கை வைத்தனர். காட்டுயானை சேதப்படுத்தியதில் வெள்ளப்பாவிற்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறினா்.

இதையடுத்து தகவல் அறிந்து பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் வெள்ளப்பாவிற்கு அரசிடம் இருந்து நஷ்ட ஈடு வாங்கி தருவதாக உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்