தமிழக லாரி மோதி காட்டு யானை செத்தது

பந்திப்பூர் வனப்பகுதியில் தமிழக லாரி மோதி காட்டு யானை ஒன்று செத்தது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-14 18:45 GMT

பெங்களூரு:


கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி தமிழ்நாடு மற்றும் கேரளா வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. மேலும் இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை அமலில் உள்ளது. இரவு நேரத்தில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் லாரி மோதி காட்டு யானை ஒன்று செத்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் தமிழ்நாடு கோவையை சேர்ந்த லாரி ஒன்று சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை நோக்கி வந்தது. அந்த லாரி இரவு 8.30 மணி அளவில் குண்டலுபேட்டை அருகே மத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று டிரைவர் லாரியை அதிவேகமாக ஓட்டியதாக தெரிகிறது.

அந்த சமயத்தில், சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று வந்துள்ளது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் லாரி, யானை மீது மோதியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் லாரி டிரைவர் அய்யாசாமி மற்றும் கிளீனர் ஆனந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரி மோதி உயிரிழந்த காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்து அதேப்பகுதியில் வனத்துறையினர் குழித்தோண்டி புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், செத்தது 25 வயது நிரம்பிய பெண் யானை ஆகும். இரவு 9 மணிக்குள் வனப்பகுதி சாலையை கடக்க வேண்டும் என்பதால் டிரைவர், லாரியை அதிவேகமாக ஓட்டி வந்ததும், அப்போது சாலையின் குறுக்கே நின்ற யானை மீது லாரி மோதியதும், இதில் யானை செத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், லாரி மோதி யானை செத்த சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் இரவு 9 மணிக்கு பதிலாக மாலை 6 மணியில் இருந்தே வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்