காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்

மூடிகெரே அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்தது.

Update: 2023-04-29 18:45 GMT

சிக்கமகளூரு-

மூடிகெரே அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்தது.

காட்டு யானை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹெம்மாடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக காபி தோட்டம் உள்ளது. அந்த காபி தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த காட்டுயானை அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த காபி, மற்றும் பாக்கு மரங்களை தும்பிக்கையால் முறித்தும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட காபி செடிகள், 30-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் நாசம் அடைந்தன.

இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அந்த வீடியோவை அவர்கள் மூடிகெரே வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானை நடமாட்டத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். காட்டு யானை அட்டகாசத்தால் ஹரிசுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக உள்ளது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் பீதியடைந்துள்ள அப்பகுதி மக்களும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்