சார்மடி மலைப்பகுதியில் ஆபத்தை உணராமல் அருவி முன்பு 'செல்பி' எடுக்கும் சுற்றுலா பயணிகள்
சார்மடி மலைப்பகுதியில் ஆபத்தை உணராமல் அருவி முன்பு சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு-
சார்மடி மலைப்பகுதியில் ஆபத்தை உணராமல் அருவிகள் முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து வருகிறார்கள்.
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரம் இருந்த மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் சார்மடி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக சிக்கமகளூரு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக அருவிகள் தோன்றி உள்ளது.
சுற்றுலா பயணிகள்
இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். அவ்வாறு சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு மலைப்பகுதிக்கு சென்று அருவி அருகே நின்று செல்பி எடுத்து வருகிறார்கள்.
சில சுற்றுலா பயணிகள் பாறை மீது ஏறி கனமழையிலும் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகிறார்கள். புதிதாக தோன்றிய அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதையும் மீறி சுற்றுலா பயணிகள் அருவி அருகே சென்று செல்பி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
ரோந்து பணி
இதனை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் போலீசார் சார்மடி மலைப்பாைதயில் அடிக்கடி ரோந்து பணி செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுப்பி மாவட்ட குந்தாப்புரா தாலுகா அரிசிகுண்டே நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்த வாலிபர் தண்ணீரில் விழுந்து பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.