பசுமாட்டை வேட்டையாடி கொன்ற புலி; கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

விராஜ்பேட்டையில் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை புலி வேட்டையாடி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-12 15:02 GMT

குடகு;

புலிகள் நடமாட்டம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே பஞ்சாயத்திற்குட்பட்டது பாரங்களா ஹண்டி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானைகள், புலி, சிறுத்தை போன்றவை இரைதேடி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புலிகள் நடமாட்டம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. அதை பிடிக்கும்படி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. இதனால் புலிகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பூசப்பா என்பவருக்கு சொந்தமான 3 பசுமாடுகளை கூலி தொழிலாளியான ஷேக் என்பவர் மேய்ச்சலுக்காக பாடகா பானஹள்ளியை அடுத்த பாரங்கா-ஹூண்டி பகுதிக்கு அழைத்து சென்றிருந்தார்.

பசுமாடு சாவு


அங்குள்ள காபி தோட்டம் அருகே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென்று காபி தோட்டத்தின் புதரில் இருந்து புலி ஒன்று சீறிப்பாய்ந்து வெளியே ஓடி வந்தது. நேராக அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடு மீது அந்த புலி பாய்ந்தது. இதைப்பார்த்த ஷேக் பதறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் இது குறித்து அவர் காபி தோட்டத்தில் இருந்த கூலி தொழிலாளிகளுக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த அவர்கள் மாட்டை மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அந்த மாடு செத்துவிட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மாட்டின் உடலை கைப்பற்றினர். பின்னர் கால்நடை டாக்டர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து அந்த மாட்டை வனப்பகுதியில் புதைத்தனர்.

நடவடிக்கை

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் பூதப்பாவுக்கு சொந்தமான மாட்டை புலி வேட்டையாடிவிட்டு சென்றது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாட்டை வேட்டையாடியிருப்பது அவருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே மாநில அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர் வனத்துறையினரிடம் கேட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த புலி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பலர் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் புலி நடமாட்டத்தை தடுக்கவும், அதை இரும்பு கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்