பெயிண்ட் கடையில் பயங்கர தீவிபத்து

மடிகேரியில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Update: 2023-01-10 18:45 GMT

குடகு:-

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா கோனிகொப்பலு பகுதியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. கடையில் தீ எரிவதை அந்த பகுதியில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கடையில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கடையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ேமலும் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமலும் தடுத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மடிகேரி புறநகர் போலீசார் வந்தனர். அவர்கள் கடையை பார்வையிட்டனர்.

மேலும், விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த கடையில் விற்பனைக்காக பெயிண்ட் இருந்ததும், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதும் தெரிந்தது. தீவிபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமானது. தீவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்ட் கடையில் பற்றி எரிந்த தீயையும், தீயணைப்பு வீரர்கள் அதை அணைப்பதற்கு போராடியதையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்