மேற்குவங்காளத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து 5 பேர் பலி
மேற்குவங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பலர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பட்டாசு ஆலை வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் அந்த வீடு தரைமட்டமானது. வெடிவிபத்தால் ஏற்பட்ட தீயால் அங்கு கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில சுற்றுச்சூழல் மந்திரி மனாஸ் ரஞ்சன் பூனியா, இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.