தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை; நண்பர்கள் 2 பேர் கைது

சிவமொக்கா டவுனில், குடிபோதை தகராறில் தலையில் கல்லைப்போட்டு வாலிபரை கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-03 14:56 GMT

சிவமொக்கா;

குடிபோதையில் தகராறு

சிவமொக்கா டவுன் ஒசமனே பகுதியை சேர்ந்தவர்கள் புச்சி கிரண்(வயது 23), பிரஜ்வல் மற்றும் காடிகொப்பா பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 3 பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்த சென்றுள்ளனர்.

இதையடுத்து அவா்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் வெளியே வந்துள்ளனர். அப்போது கிரணிடம், பிரஜ்வல் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரும் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு முற்றி கைகலப்பானது. அப்போது கிரணை, 2 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கு கிடந்த பீர் பாட்டிலால் கிரணின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

வாலிபர் கொலை

மேலும் ஆத்திரம் அடங்காமல் அருகில் கிடந்த கல்லை தூக்கி கிரணின் தலையில் போட்டு படுகொலை செய்துள்ளனர். இதைப்பார்த்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வினோபாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கிரணின் நண்பர்களான பிரஜ்வல் மற்றும் கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணையில், குடிபோதை தகராறில் 2 பேரும் சேர்ந்து கிரணை கொன்றது தெரியவந்தது. கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்