கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

சிக்கமகளூரு அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-23 18:45 GMT

சிக்கமகளூரு:-

காட்டுயானை நடமாட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா ஒரநாடுவை அடுத்த மூண்டுகத்தே கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கிராமத்திற்குள் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த யானைகள் விளை நிலங்களுக்கு புகுந்து விளை பயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஒன்றை காட்டுயானை

நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை ஒன்று மூண்டுகத்தே கிராமத்திற்குள் புகுந்தது. இந்த காட்டுயானை கிராமங்களில் இருந்த தெருக்களில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த கிராம மக்கள் வீட்டிற்கு சென்று கதவை தாழிட்டு கொண்டனர். ஒரு சிலர் தங்கள் செல்போனிகளில் காட்டுயானையை வீடியோ எடுத்தனர். இதையடுத்து சில மணி நேரம் கிராமத்தை சுற்றி வந்த அந்த காட்டுயானை எந்தவிதமான சேதத்தை ஏற்படுத்தாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதை பார்த்த கிராம மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலசா வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது உறுதியானது.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

அப்போது கோபமடைந்த கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டத்தால் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகிறோம். உடனே அந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டுயானைகள் நடமாடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்