சமத்துவம் இல்லாத மதம், மதமே கிடையாது மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

சமத்துவம் இல்லாத மதம், மதமே கிடையாது என்று மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி அளித்துள்ளார்.

Update: 2023-09-04 18:45 GMT

பெங்களூரு

கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இலவச திட்டங்களால் அரசு கஜானா திவாலாவதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். இன்னொருபுறம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்துள்ளனர்.

மத்தியபிரதேசத்தில் காங்கிரசின் கிரகலட்சுமி திட்டம் போல் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். பா.ஜனதாவினர் அதிக குழப்பத்தில் உள்ளனர். காங்கிரசின் திட்டங்களால் அவர்கள் பயந்துபோய் உள்ளனர்.

மத்தியில் கடந்த 9 ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. அதுகுறித்து விவாதிக்கவும், வெள்ளை அறிக்கை வெளியிடவும் பா.ஜனதா தயாரா?. கர்நாடகத்தின் நிதிநிலை குறித்து பா.ஜனதாவினர் கவலைப்பட தேவை இல்லை. எங்களிடம் நிதித்துறையில் அனுபவமிக்க முதல்-மந்திரி உள்ளார்.

அவர் எல்லாவற்றையும் சரிசெய்வார். சமத்துவம் இல்லாத மதம் மதமே கிடையாது. சமூக-பொருளாதாரத்தில் வேறுபாடு இருப்பது, மனிதர்களிடையே பாகுபாடு இருப்பதை எப்படி மதம் என்று சொல்வது?. நாங்கள் அரசியல் சாசனத்தின் விருப்பத்தின்படி புத்தர், பசவண்ணர், அம்பேத்கரின் கொள்கைகள்படி நடந்து கொள்கிறோம். பா.ஜனதாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை.

இவ்வாறு மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.

மேலும் செய்திகள்