மழையால் முழுமையாக வீடு இடிந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி; மந்திரி ஆர்.அசோக் அறிவிப்பு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழையால் முழுமையாக வீடு இடிந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என மந்திரி ஆர்.அசோக் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-08 15:36 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய் துறை மந்திரி ஆர்.அசோக் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் பேசியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படும். முழுமையாக வீடுகள் சேதம் அடைந்து இருந்தால் அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.

பாதி அளவு வீடு சேதம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், 25 சதவீதம் அளவில் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர் இதை நேரில் கண்காணிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வராத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெறும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்