வீட்டில் இருந்து மாயமான தனியார் நிறுவனஊழியர் பிணமாக மீட்பு
வீட்டில் இருந்து மாயமான தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு-
ஆண் பிணம் மீட்பு
பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் லைகாட் அலி கான்(வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வருவது வழக்கம். அதன்படி அவர் சம்பவத்தன்றும் மாலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பயந்துபோன குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை இதையடுத்து அவர்கள் இதுபற்றி சந்திரா லே-அவுட் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள ஆள் இல்லாத வீட்டின் அருகே ஆண் பிணம் கிடந்தது. அதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விசாரணையும் நடத்தினர். விசாரணையில் மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட லைகாட் அலி கான் தான் உயிரிழந்து கிடப்பது என்பது தெரிந்தது. இதையடுத்து குடும்பத்தினரை வரவழைத்து அதனை உறுதி செய்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே தங்கள் மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான வாசிம் மற்றும் ஜோகர் ஆகியோர் இடையே பணத்தகராறு ஏற்பட்டு இருந்ததாக லைகாட் அலிகானின் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறினர்.
அதன் காரணமாக அவர்கள், தங்கள் மகனை கொலை செய்திருக்கலாம் என கூறி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசிம், ஜோகர் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.