சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்; 30 மாணவர்கள் காயம்

மூடபித்ரி அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 மாணவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சுற்றுலா சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-03 14:58 GMT

மங்களூரு;

தனியார் பஸ்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூாி மாணவர்கள் தனியார் பஸ் ஒன்றில் நேற்று காலை சுற்றுலா சென்றுள்ளனர். மூடபித்ரி அருகே பனட்கா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென பஸ் மீது மோதுவது போல் வந்துள்ளது.

இதைப்பார்த்த டிரைவர், பஸ்சை இடதுபுறம் திருப்பி உள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் பஸ், சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

30 பேர் காயம்

இதில் இடிபாடுகளில் சிக்கி பஸ்சுக்குள் இருந்த 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து கார்கலா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கிரேன் உதவியுடன் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழிவகுத்து கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்