ராகுல் காந்தி பாதயாத்திரையில் கலந்து கொள்ள சென்ற நபர் திடீர் மரணம்

ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொள்ள சென்ற நபர் திடீரென உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-12-03 13:50 GMT



போபால்,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த மாதம் 23-ந்தேதி முதல் மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராஜ்கார் மாவட்டத்தின் ஜிராப்பூர் பகுதியை சேர்ந்த மங்கிலால் ஷா (வயது 55) என்பவர் சென்றுள்ளார்.

அவர், அகர்-மால்வா மாவட்டத்தில் சூஸ்னெர் பகுதியில் நடந்த பாதயாத்திரையில் பங்கேற்க சென்றுள்ளார். செல்லும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் அவரை உடனடியாக நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும், அவரது ஆதரவாளர்கள் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்று கூறி உடலை தூக்கி சென்று விட்டனர் என மருத்துவ அதிகாரி மணீஷ் குரில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்