கர்நாடகத்தில் 9-வது நாளாக நடைபயணம்; ராகுல்காந்தி பாதயாத்திரையில் பிக்பாக்கெட் அடிக்க முயன்றவரால் பரபரப்பு

கர்நாடகத்தில் ராகுல்காந்தி 9-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். இதில் ஒருவர் பிக்பாக்கெட் அடிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-10 20:24 GMT

பெங்களூரு:

பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அவரது இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி, கேரளா வழியாக கடந்த 30-ந் தேதி கர்நாடகம் வந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வழியாக மைசூரு, மண்டியாவில் பாதயாத்திரை நடைபெற்றது.

ராகுல் காந்தியின் பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு வந்தது. நேற்று முன்தினம் இரவு துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி போச்கட்டே பகுதியில் நிறைவடைந்தது. ராகுல் காந்தி அங்கேயே தங்கினார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் 9-வது நாள் பாதயாத்திரை நேற்று காலை 6.30 மணிக்கு போச்கட்டே பகுதியில் இருந்து தொடங்கியது.

ஓடிச்சென்ற ராகுல்காந்தி

இந்த பாதயாத்திரை காலை 10 மணிக்கு அதே மாவட்டத்தில் உள்ள ஹுலியூர் பசவனகுடிக்கு வந்தது. அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு வனப்பகுதி காரணமாக 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தி காரில் பயணித்து சித்ரதுர்கா மாவட்டம் இரியூருக்கு வந்தார். அங்கிருந்து அவர் 4 மணிக்கு பாதயாத்திரையை தொடங்கினார். இரவு 7 மணிக்கு இந்த பாதயாத்திரை வீர ஆஞ்சனேயா கோவில் பகுதிக்கு வந்தது.

அங்கு சிறிது ஓய்வு எடுத்த ராகுல் காந்தி இரியூர் ஹர்த்திக்கோட்டே கிராமத்திற்கு வந்தார். நேற்றைய பாதயாத்திரை அங்கு நிறைவடைந்தது. அந்த கிராமத்தில் ராகுல் காந்தி தங்கினார். இந்த பாதயாத்திரையின் போது ராகுல்காந்தியும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் சிறிது தூரம் வரை ஓடிச் சென்றனர். இதனால் அவர்களுடன் பாதயாத்திரையில் பங்கேற்ற தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் ஓடினர்.

பிக்பாக்கெட் அடிக்க முயற்சி

வழிநெடுகிலும் ராகுல்காந்திக்கு கட்சியினர், பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பிக்பாக்கெட் அடிக்க முயற்சி செய்த இளைஞரை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் சித்ரதுர்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் பிக்பாக்கெட் ஆசாமியின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இதனால் ராகுல்காந்தி பாதயாத்திரையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

கலந்துரையாடினார்

நேற்று நடைபெற்ற ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.பாதயாத்திரையில் பெண்கள், விவசாயிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். சில இடங்களில் அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் சாலையோரம் நின்றிருந்த சிறுமிகள், இளம்பெண்களிடம் ராகுல்காந்தி நலம் விசாரித்தார். மேலும் குறைகளையும் கனிவுடன் கேட்டறிந்தார்.

பாதயாத்திரையின்போது ஒரு இடத்தில் சாலை சேதம் அடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் அரசு சார்பில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்