தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது
எச்.டி.கோட்டையில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. மேலும் அந்தப்பகுதி மக்கள் நிவாரணம் கேட்டு வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு:-
சிறுத்தை அட்டகாசம்
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பதனகுப்பே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப்பகுதியில் சிறுத்தை ஒன்று தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆடு, மாடு, நாய்களை அடித்து கொன்று வந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
கூண்டில் சிக்கியது
மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளயேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.
இதுபற்றி அறிந்ததும் நேற்று காலை அந்தப்பகுதி மக்கள், அங்கு திரண்டு வந்தனர். மேலும் வனத்துறையினரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.
மக்கள் மகிழ்ச்சி
பின்னர் வனத்துறையினர் கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். அப்போது சிறுத்தை இருந்த கூண்டை எடுக்க விடாமல் வனத்துறையினர் சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது, சிறுத்தை தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து வனத்துறையினர், சிறுத்தை தாக்கி கால்நடைகளுக்கு தக்க நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள், வனத்துறையினரை விடுவித்தனர். அதன்பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை நாகரஒலே வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர்.