தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

எலந்தூரில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-03 22:08 GMT

கொள்ளேகால்:-

சிறுத்தை அட்டகாசம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா மல்லிகேஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று ெவளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. மல்லிகேஹள்ளி மட்டுமின்றி குண்டூர், ஒன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சிறுத்தை புகுந்து ஆடு, மாடுகள், நாய்களை அடித்து கொன்றும் வந்தது. மேலும் சிறுவன் ஒருவனையும் சிறுத்தை தாக்கி இருந்தது.

இதனால் வனத்துறையினர் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி குண்டூர், மல்லிகேஹள்ளி கிராமங்களில் இரும்பு கூண்டுகளும் வைத்தனர்.

கூண்டில் சிக்கியது

ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் இருந்து வந்தது. இதற்கிடையே குண்டூர் மலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வனத்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் சிறுத்தை தென்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, மல்லிகேஹள்ளி கிராமத்தில் விளைநிலத்தில் இருந்த கூண்டில் இரையை சாப்பிட முயன்றபோது வசமாக சிக்கிக் கொண்டது. இதனை அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் குண்டூர், மல்லிகேஹள்ளி உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

கிராம மக்கள் மகிழ்ச்சி

பின்னர் வனத்துறையினர், சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், பிடிபட்டது 6 வயது நிரம்பிய ஆண் சிறுத்தையாகும். இதனை மலை மாதேஸ்வரா வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கி உள்ளதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்