தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்படும்; பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு
தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தாக்கல் செய்து பேசியபோது கூறியதாவது:-
* பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரிகளுக்கு 8,311 புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.550 கோடி ஒதுக்கப்படுகிறது. அந்த வகுப்
பறைகள் விரைவில் கட்டி முடிக்கப்படும்.
* மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5,775 பள்ளிகள் மற்றும் 150 ஜூனியர் கல்லூரிகளில் புதிய கழிவறைகள் கட்டப்படும். இது ரூ.200 கோடி செலவில் நரேகா திட்டத்துடன் இணைக்கப்படும்.
* 3,833 பழமையான, பாழடைந்த மற்றும் மழையால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் மற்றும் 724 ஜூனியர் கல்லூரி அறைகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* 47,272 அரசு பள்ளிகள், 1,231 அரசு ஜூனியர் கல்லூரிகளை பராமரிக்க ரூ.153 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் கட்டிடங்கள் பராமரிப்பு பணிக்காக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ஒதுக்கப்படும்.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு முட்டை அல்லது கடலை மிட்டாய் அல்லது வாழைப்பழம் வாரத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். இந்த புதிய திட்டத்தில் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
* மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, 'காளிகா பாலவர்தனே' என்ற திட்டம், ரூ.80 கோடி செலவில் தொடங்கப்படும். இரண்டாம் நிலை தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக 'மருசிஞ்சனா' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* SATS மென்பொருள் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மென்பொருள் SATS 2.0 க்கு மேம்படுத்தப்படும்.
* உயர் தொடக்க மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் புதுமையான ஆய்வகங்கள் அமைக்கப்படும். 2023-24-ம் கல்வியாண்டில், மாநிலத்தின் ஒவ்வொரு வருவாய் மண்டலத்திலும் ரூ.2 கோடி செலவில் 4 ஆய்வகங்கள் நிறுவப்படும்.
* 'சஷ்ய சமல' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் பள்ளிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இந்த கூட்டு முயற்சியில் கல்வி மற்றும் வனத்துறை ஈடுபடும்.
* இலக்கியவாதிகள் மற்றும் பதிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ரூ.10 கோடி வழங்கப்படும்.
* மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கை கூட்டாட்சி முறைக்கு பொருந்தாதது. இது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது. பல்வேறு மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களை கொண்ட இந்தியா போன்ற தேசத்திற்கு ஒரே மாதிரியான கல்வி முறை பொருந்தாது. மாநிலத்தின் உள்ளூர், சமூக, கலாசார மற்றும் பொருளாதார சூழலை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை வகுக்கப்படும். புதிய கொள்கையானது மாநிலத்தில் உள்ள உயர்கல்வி தரத்தை உலக அளவில் உயர்த்துவதுடன், நமது இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடவும், வேலைவாய்ப்புகளைப் பெறவும் உதவும்.
* பெங்களூருவில் உள்ள விசுவேஸ்வரய்யா என்ஜினீயரிங் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.20 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
* அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ஆங்கில வகுப்புகள் தொடங்கப்படும்.
* உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள 13,167 மாணவர்கள் தங்கும் திறன் கொண்ட 224 குடியிருப்பு விடுதிகள் சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்படும்.
* உயர்கல்வித் துறையின் அனைத்து உதவித்தொகை திட்டங்களையும் ஒரே உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தார்வாரில் உள்ள உயர்கல்வி அகாடமியில் சுமார் 7,800 துறை ஊழியர்களுக்கு ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'விருத்தி சைதன்யா' திட்டத்தின் கீழ் தகுந்த பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
* உயர் கல்வியை தொடர்வதில் உள்ள மொழித் தடைகளை மதிப்பிடுவதற்கும், பல்கலைக்கழக மாணவர்கள் கன்னடத்தில் தேர்வு எழுதுவதற்கும், பரவலாகப் பயன்படுத்தப்படும் குறிப்புப் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களை கன்னடத்தில் மொழிபெயர்ப்போம்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.