அனுமன் கோவில் நிர்வாகத்திற்கு ரூ.25 லட்சம் நிலத்தை வழங்கிய முஸ்லிம் தொழில் அதிபர்

அனுமன் கோவில் நிர்வாகத்திற்கு ரூ.25 லட்சம் நிலத்தை வழங்கிய முஸ்லிம் தொழில் அதிபரின் செயல் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.;

Update: 2022-09-02 22:24 GMT

யாதகிரி: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் புறசபையின் முன்னாள் தலைவர் அஜீம் அகமதுஷா. தொழில்அதிபரான இவர், ரியல்எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அஜீம் அகமதுஷாவுக்கு சொந்தமாக சேடம்-யாதகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1,200 சதுர அடி நிலம் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அனுமன் கோவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த காம்பவுண்டு சுவர் இடித்து அகற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவிலை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்க பக்கத்தில் உள்ள அஜீம் அகமதுஷாவுக்கு சொந்தமான நிலத்தை வாங்க அனுமன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தார்கள்.

இதையடுத்து, அஜீம் அகமதுஷாவை சந்தித்து கோவிலுக்காக நிலத்தை விற்கும்படி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். கோவிலில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தனது நிலத்தை கேட்பதால், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதே நேரத்தில் விலைக்கு கொடுக்க மாட்டேன் என்றும், தானமாக கொடுப்பதாகவும் அஜீம் அகமதுஷா கூறினார். அதன்படி, தனக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலத்தை அனுமன் கோவிலுக்கு அஜீம் அகமதுஷா கொடுத்துள்ளார். கோவிலில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தன்னால் ஆன நிதி உதவியை அளிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். கோவிலுக்கு இலவசமாக நிலத்தை கொடுத்த அஜீம் அகமதுஷாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்