வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்

சித்தராமையா முதல்-மந்திரி ஆவார் என கூறிய வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2023-02-23 18:45 GMT

சிவமொக்கா:-

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார்கள். அது ஒருபுறம் இருக்க, கர்நாடத்தில் அடுத்து யார் முதல்-மந்திரி ஆவார்கள் என்று மக்களிடையே பேச்சும் இருந்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் கர்நாடகத்தில் அடுத்த முதல்-மந்திரி யார் என்ற விவாதத்தில் தகராறு ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா மல்லிகனஹள்ளி கிராமத்தை ஆகாசும், அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ், யோகேஷ் ஆகியோரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது ஆகாஷ், கடந்த 2013-ம் ஆண்டை போல கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக சித்தராமையா வருவார் என்று கூறினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தினேசும், யோகேசும் குமாரசாமி தான் முதல்-மந்திரியாக வருவார் என்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தினேஷ், யோகேஷ் உள்பட 5 பேர் சேர்ந்து ஆகாஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஆகாஷ் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பத்ராவதி போலீசார் தினேஷ், யோகேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்