நடுவானில் பறந்தபோது விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற மராட்டிய வாலிபர் கைது

நடுவானில் பறந்தபோது விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-02 18:45 GMT

பெங்களூரு:-

பயணிகள் அதிர்ச்சி

மராட்டியத்தை சேர்ந்தவர் சுவப்னில் ஒலே (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவர் பாங்காக் செல்வதற்கு முடிவு செய்தார். இதற்காக அவர் நாக்பூரில் இருந்து பெங்களூரு வந்து, அதன் பிறகு இங்கிருந்து பாங்காக்கிற்கு புறப்பட இருந்தார்.

அதன்படி அவர் கடந்த 30-ந் தேதி நாக்பூரில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் மூலம் வந்தார். அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இருக்கையில் அமர்ந்து இருந்த சுவப்னில் ஒலே, விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார்.

கைது

இதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விமான ஊழியர்களை அழைத்து கூறினர். இதையடுத்து அவர்கள் கதவை திறக்காமல் சுவப்னில் ஒலேவை தடுத்தனர். மேலும் பெங்களூரு விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் தயாராக இருந்தனர். இதற்கிடையே அந்த விமானம் பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில்

தரையிறங்கியது. உடனே அவரை விமான ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் தனியார் நிறுவன ஊழியரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

போலீஸ் ஜாமீனில்...

விசாரணையில் அவர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்பதும், பெங்களூருவில் இருந்து பாங்காக்கிற்கு விமானத்தில் புறப்பட இருந்ததும் தெரிந்தது. ஆனால் அவர் எதற்காக விமான அவசர கால கதவை திறக்க முயன்றார் என்பது தெரியவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்த விமான நிலைய போலீசார், விசாரணைக்கு பிறகு சுவப்னில் ஒலேவை ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்