தாயை ஏமாற்றிய தந்தையை கொலை செய்த நபர்; தடுத்த தாத்தாவும் படுகொலை
உத்தர பிரதேசத்தில் தாயை அடித்து, துன்புறுத்தி, விவாகரத்துக்கு வழி செய்த தந்தையை மகன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கிரேட்டர் நொய்டா,
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் பல்லு கேரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜாஸ்மின். இவருடைய தந்தை விக்ரமஜித் ராவ், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவியை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார்.
தொடர்ந்து சித்ரவதையும் செய்துள்ளார். இதனால், வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகளுடன் ஜாஸ்மினின் தாயார் வெளியேறி உள்ளார்.
இதன்பின்னர், குடும்பத்தினரை விட்டு பிரிந்து, கிரேட்டர் நொய்டா பகுதியில் விக்ரமஜித் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த தம்பதி விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையும் ஒருபுறம் நடந்து வருகிறது.
இதனால், ஜாஸ்மின் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில், திரைப்பட படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு வரும் பகுதியில் விக்ரமஜித்தும், அவருடைய தந்தையும் சம்பவத்தன்று இரவில் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அவர்களை நோக்கி சென்ற ஜாஸ்மின், அந்த பகுதியில் இருந்த கோடாரி ஒன்றை எடுத்து தந்தையை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலின்போது, பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த விக்ரமஜித்தின் தந்தை ராம்குமார் தடுப்பதற்காக சென்றுள்ளார். அவர் தன்னை அடையாளம் கண்டு விடுவார் என்ற அச்சத்தில், ஜாஸ்மின் அவரையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்.
அப்போது, ராம்குமார் மெல்ல நகர்ந்து சென்றிருக்கிறார். இதனால், அவர் உயிர்தப்பி விடுவார் என பயந்து, சுத்தியலால் அவருடைய தலையில் பலமுறை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதன்பின்பு அந்த ஆயுதங்களை கழிவறையில் வீசி விட்டு, சுவர் ஏறி குதித்து, வீட்டுக்கு தப்பி சென்றுள்ளார். இதன்பின் ஆடைகளை களைந்து, தோய்த்து விட்டு படுத்து தூங்கியுள்ளார்.
இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜாஸ்மினை கைது செய்தனர். ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பின்பு, ஜாஸ்மின் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.