வீடியோ காலில் நிர்வாண வீடியோ எடுத்து, பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த நபர்
டெல்லியில் சமூக ஊடகம் வழியே நட்பு கொண்ட நபர், வீடியோ காலில் பெண்ணின் நிர்வாண வீடியோவை எடுத்து, கணவருக்கு அனுப்பி பணம் பறித்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சியை ஒரு சிலர் தங்களது தேவைக்கு தவறாக பயன்படுத்துவது அதிகரித்து காணப்படுகிறது.
இதில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்த 25 வயது நபரான சான்னி சவுகான் என்ற ராகவ் சவுகான் என்பவர் டெல்லியில் உள்ள திருமணம் முடிந்த பெண் ஒருவரை கடந்த ஆண்டு ஜூலையில் இன்ஸ்டாகிராம் வழியே நட்பு கொண்டுள்ளார்.
அதன்பின், அந்த நபருடன் நட்பை தொடர்ந்த அந்த டெல்லி பெண் வாட்ஸ்அப் எண்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், கடந்த 12-ந்தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீசில் அந்த பெண் புகார் அளித்து உள்ளார்.
அதில், நட்பு ரீதியில் ராகவ் வாட்ஸ்அப் செய்திகளை அந்த பெண்ணுக்கு அனுப்பி வந்துள்ளார். அதில், பெண்ணின் நம்பிக்கைக்கு உரியவராக மாறியுள்ளார். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து உள்ளது.
இதனால், அவர்கள் இருவரும் வீடியோ காலில் ஆடைகளின்றி நிர்வாண கோலத்தில் பேசி உள்ளனர். ஆனால், ராகவ் அந்த பெண்ணின் அரை நிர்வாண வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்து உள்ளார்.
அதன்பின்னர் ராகவின் சுயரூபம் வெளிப்பட்டு உள்ளது. அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி இதுவரை ரூ.1.25 லட்சம் பணம் பறித்து உள்ளார். ஆனாலும், நிற்காமல் தொடர்ந்து பணம் வேண்டும் என கேட்டு அச்சுறுத்தி உள்ளார். வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பெண்ணின் அரை நிர்வாண வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி உள்ளார். அதன்பின்பு, ரூ.70 ஆயிரம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் வீடியோவை சமூக ஊடகத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்து உள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புகாரை பெற்று கொண்ட பின்பு, போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்ததில், கடந்த 26-ந்தேதி கரோல் பாக் பகுதியில் பதுங்கியிருந்த ராகவை கண்டறிந்தனர்.
உடனடியாக செயல்பட்டு அவரை கைது செய்து, பெண்ணின் அரை நிர்வாண வீடியோ இருந்த மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளனர். 3 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் என பல சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கி பெண்களிடம் நட்பு கோரி, அதனை ஒரு வேலையாகவே செய்து வந்துள்ளார்.
அவர் மொபைல் எண்களை பரிமாறி கொண்டு, அதன்பின் அவர்களது நம்பிக்கையை பெறும் வகையில் செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதில், அவரிடம் சிக்கும் பெண்களை வீடியோ பதிவு செய்து, மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் என துணை காவல் ஆணையாளர் சுவேதா சவுகான் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.