டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை சரமாரியாக தாக்கிய பெண் நோயாளி..!
டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை பெண் நோயாளி ஒருவர் சரமாரியாக தாக்கினார்.
புதுடெல்லி,
டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு பணியாற்றி வரும் சிவம் குமார் யாதவ் என்கிற டாக்டர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
அப்போது பெண் ஒருவர் சிகிச்சைக்காக தனது உறவுக்காரருடன் வந்திருந்தார். அவருக்கு முன்பாகவே பல நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர் சிவம் குமார் யாதவ் அந்த பெண்ணை வரிசையில் காத்திருக்கும் படி கூறினார். இதில் அந்த பெண் நோயாளிக்கும், டாக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண் நோயாளியும், அவருடன் வந்திருந்த உறவுக்காரரும் டாக்டர் சிவம் குமார் யாதவை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அந்த பெண் நோயாளி மற்றும் அவரது உறவுக்காரர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.