10-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து, லக்னோவை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-06-23 18:45 GMT

எலகங்கா:-

தனியார் நிறுவன பெண் ஊழியர்

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அம்ரிதா ஷர்மா (வயது 27). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் தனது கணவருடன் பெங்களூரு எலகங்கா அருகே நாகேனஹள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

மேலும் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது பெற்றோர் லக்னோவில் வசித்து வந்த நிலையில், அவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தந்தை இறந்ததால் மனம் உடைந்தார்

தந்தையின் இழப்பை தாங்க முடியாத அம்ரிதா ஷர்மா, மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கணவருடன் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு சென்றார்.

அப்போது திடீரென அந்த பெண், குடியிருப்பின் பால்கனி அருகே சென்றார். மேலும் திடீரென அங்கிருந்து அவர் கீழே குதித்தார். இதில் தரைதளத்தில் விழுந்த அவர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

10-வது மாடியில் இருந்து...

சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த அம்ரிதா ஷர்மாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து எலகங்கா நியூ டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தந்தை இறந்த சோகத்தில் வேலைக்கு செல்லாமல் மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதன்காரணமாக அவர் குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பெரும் சோகம்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-வது மாடியில் இருந்து பெண் ஊழியர் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்