காட்டு யானை தாக்கி விவசாயி பலி

குண்டலுபேட்டை அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-01-02 21:23 GMT

கொள்ளேகால்:

யானை தாக்கி

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் மடள்ளி உள்பட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் அடிக்கடி சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மடள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விளைநிலம் உள்ளது.

இந்த நிலையில் அவர் வழக்கம்போல் விளைநிலத்திற்கு சென்றார். அப்போது வனத்திற்குள் இருந்து காட்டு யானை ஒன்று அந்த பகுதிக்குள் புகுந்தது. இந்த யானை விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தேவராஜை விரட்டியது. யானையிடம் இருந்து தப்பிக்க தேவராஜ் ஓடியுள்ளார். எனினும், யானை அவரை விடாமல் விரட்டி வந்து தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

அப்போது யானை அவரை காலால் மிதித்து கொன்றது. இதற்கிடையே யானை விரட்ட அவர்கள் முயன்றனர். எனினும் யானை அங்கிருந்து வெளியேறாமல் இருந்தது. இதையடுத்து கிராமத்தினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், விவசாயியின் உடலை மீட்டனர்.

வனத்துறை அறிவுரை

அப்போது கிராம மக்கள் கூறுகையில் விவசாயியை தாக்கி கொன்ற யானை இங்கு முகாமிட்டுள்ளதாவும், அதை மீண்டும் வனத்திற்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்ற போலீசார், இதற்கு தீர்வு காண்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். மேலும் விளைநிலத்திற்கு யாரும் தனியாக செல்ல வேண்டாம் என அறிவறுத்தினர். விவசாயியை யானை தாக்கி கொன்ற சம்பவத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்