அரிய வகை கிளிகளை குஜராத் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்த துமகூரு தம்பதி

அரிய வகை கிளிகளை குஜராத் உயிரியல் பூங்காவில் துமகூரு தம்பதி ஒப்படைத்தனர்.

Update: 2022-08-18 16:46 GMT

துமகூரு:

கர்நாடக மாநிலம் துமகூரு டவுனை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதி ஒரு ஜோடி கிளியை வளர்த்து வந்தனர். ஆப்பிரிக்க வகை சாம்பல் நிற கிளிகள் அகும். இந்த கிளிகளை குஜராத்தில் இருந்து வாங்கி வந்து தங்களது வீட்டில் ஒருவர் போல் பாசம் காட்டி வளர்த்து வந்தனர். அதில் ஒரு கிளிக்கு ருஸ்டுமா என்றும், மற்றொரு கிளிக்கு ரோஜா எனவும் பெயர் சூட்டி பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். அந்த கிளிகளும் அர்ஜூன்-சஞ்சனா தம்பதியிடம் நட்பாக பழகி வந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி இதில் ருஸ்டுமா என்ற கிளி திடீரென்று மாயமானது. இதனால் நிலைகுலைந்து போன தம்பதியினர் காணாமல் போன கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.85 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி சீனிவாஸ் என்பவர் மாயமான ருஸ்டுமா கிளியை கண்டுபிடித்து அர்ஜூன்-சஞ்சனா தம்பதியிடம் 24-ந்தேதி ஒப்படைத்தார்.

இதையடுத்து அவர்கள் சீனிவாசுக்கு ரூ.85 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினர். இருப்பினும் அந்த கிளிகள் மீண்டும் பறந்து சென்றுவிடுமோ என்ற அச்சம் அர்ஜுன்-சஞ்சனா மத்தியில் நிலவி வந்தது. அத்துடன் ஆசை ஆசையாய் வளர்த்து வரும் கிளிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என அவர்கள் கருதினர். இதனால் தாங்கள் வளர்த்து வரும் 2 கிளிகளையும் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

அதன்படி 2 கிளிகளையும் அர்ஜூனும், அவரது மனைவி சஞ்சனாவும் சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். மேலும் சஞ்சனா கிளிகளின் நினைவாக இரு இறகுகளை எடுத்து வந்தார். அந்த இறகுகளை கம்மல் போல் வடிவமைத்து அணிந்து வருகிறார். இரு கிளிகளும் கன்னடத்தில் அர்ஜூன்-சஞ்சனா தம்பதியிடம் உரையாடி வந்ததும் நினைவுகூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்