துங்கா ஆற்று வெள்ளத்தில் குதித்து சாகசம் செய்த வாலிபர் மீது வழக்கு

சிவமொக்காவில் துங்கா ஆற்று வெள்ளத்தில் குதித்து சாகசம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2023-07-26 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்காவில் துங்கா ஆற்று வெள்ளத்தில் குதித்து சாகசம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா மற்றும் குடகு, வடகர்நாடக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழையால் மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இந்தநிலையில், சிவமொக்கா டவுனில் உள்ள துங்கா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க 3 வாலிபர்கள் சென்றனர். அதில் ஒரு வாலிபர் ஆபத்தை உணராமல் ஆற்றில் குதித்து சாகசத்தில் ஈடுபட்டார். இதனை அவரது நண்பர்கள் 2 பேரும் வீடியோவாக எடுத்தனர்.

ஆற்றில் குதித்து சாகசம்

அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து துங்கா ஆற்றில் குதித்து சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை கோட்டை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், சிவமொக்கா ராஜீவ் நகரை சேர்ந்த கங்கப்பா (வயது28) என்பவர் தான் ஆற்றில் குதித்து சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கங்கப்பாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீச்சல் வீரர் என்பது தெரியவந்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சமயத்தில் சாகசம் செயல்களில் ஈடுபட கூடாது என கங்கப்பாவிடம் போலீசார் கூறினர். பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீர் வீழ்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்ராவதி டவுன் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்ற வாலிபர் நண்பர்களுடன் உடுப்பி மாவட்டம் கொல்லூர் அருகே உள்ள அரிசினகுண்டே நீர் வீழ்ச்சியை காண சென்றார். அப்போது அவர் செல்பி எடுக்க முயன்றபோது நீர்வீழ்ச்சி தடாகத்தில் விழுந்து தண்ணீரில் முழ்கி பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்