கொலையாளியை கொல்ல முயன்றதாக கிராம மக்கள் 1,000 பேர் மீது வழக்கு
நம்பிஹள்ளி கிராமத்தில் மனைவி, மாமனாரை கொலை செய்த கொலையாளியை கொல்ல முயன்றதாக கிராம மக்கள் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களில் 450 பேரை கைது செய்துள்ளனர்
கோலார் தங்கவயல்
இறைச்சி வியாபாரி
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ்(வயது 45). இவர் இறைச்சி வியாபாரி ஆவார். இவரது மனைவி ராதா. இவர் சீனிவாசப்பூர் தாலுகா நம்பிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
டெய்லரான அவருக்கும், நாகேசுக்கும் கடந்த பல வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக ராதாவும், நாகேசும் பிரிந்தனர்.
பின்னர் ராதா நம்பிஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார். மேலும் கிராமத்திலேயே ஒரு சிறிய பெட்டிக்கடை அமைத்து பிழைப்பு நடத்தி வந்தார். டெய்லர் வேலையும் செய்து வந்தார்.
படுகொலை
இதற்கிடையே நாகேஷ், ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே ராதா, நாகேசிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கிய நீதிபதி, ராதாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக ரூ.8 ஆயிரத்தை நாகேஷ் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார். இதனால் நாகேஷ், ராதா மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நம்பிஹள்ளி கிராமத்திற்கு சென்ற நாகேஷ், ராதாவை அவரது கடையில் வைத்து சந்தித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொன்றார். அதை தடுக்க வந்த தனது மாமனாரையும் வெட்டி படுகொலை செய்தார்.
1,000 பேர் மீது வழக்கு
அதைப்பார்த்த கிராம மக்கள் நாகேசை தாக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்து ஓடி ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்ட நாகேஷ் அங்கிருக்கும் கியாஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து கிராம மக்கள் அனைவரையும் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அவர் பதுங்கி இருந்த வீட்டின் மீது கற்களை வீசி தாக்கினர். இதை தடுக்க வந்த போலீசார் மீதும் கற்கள் விழுந்தன. இதனால் அவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் நாகேசை கொலை செய்ய முயன்றதாக கூறி நம்பிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 1,000 பேர் மீது சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அதில் 450 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை 10 வேன்களில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பரபரப்பு
மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். போலீசாருக்கு பயந்து பலர் கிராமத்தை விட்டே ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.