பள்ளி பஸ் மீது கார் மோதியது; மாணவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்
மூடபித்ரி அருகே பள்ளி பஸ் மீது கார் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா அலங்கார் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் நேற்றுமுன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பஸ், அந்தப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுபோது எதிர்திசையில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.
அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி எதிரே வந்த பள்ளி பஸ் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பள்ளி பஸ் டிரைவர், 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காரில் வந்தவர்களில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைப்பாா்த்த அந்த பகுதியினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மூடபித்ரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மூடபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.