நின்ற அரசு பஸ் மீது கார் மோதல்; பெண் உள்பட 4 பேர் பலி

மண்டியா அருகே அரசு பஸ்சின் பின்பக்கத்தில் கார் மோதிய கோர விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். அவர்கள் பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-09-27 18:45 GMT

பெங்களூரு:-

ஐ.டி. நிறுவன ஊழியர்

பெங்களூரு பெண்டிகனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நமீதா. இவர் பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது சக ஊழியர் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் பஜந்திரி.

மேலும் நமீதாவின் நண்பரும், பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தவருமான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா, பெங்களூருவைச் சேர்ந்த வம்ஷிகிருஷ்ணா ஆகியோர் ஹாசன் மாவட்டத்துக்கு காரில் சென்றனர். பின்னர் ஹாசன் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் புறப்பட்டனர்.

அரசு பஸ்

அவர்கள் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா பெல்லூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பி.ஜி.நகரில் பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு முன்னால் கே.எஸ்.ஆர்.டி.சி.(அரசு) பஸ் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென அங்குள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி முன்பு நின்றது. அதை சற்றும் எதிர்பாராத கார் ஓட்டுனர் உடனடியாக காரை நிறுத்த முயன்றார்.

தறிகெட்டு ஓடி மோதியது

ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி அரசு பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தை நேரில் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் விரைந்து வந்தனர்.

அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரில் பயணித்து வந்த நமீதா, அவரது சக ஊழியர் ரகுநாத் பஜந்திரி, நண்பர்கள் பங்கஜ் சர்மா, வம்ஷிகிருஷ்ணா ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த பெல்லூரு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சோகம்

அவர்கள் விபத்தில் பலியான நமீதா உள்ளிட்ட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பெல்லூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்