வனப்பகுதியில் இருந்து வழி தவறி கிராமத்துக்குள் நுழைந்த குட்டி யானை

வனப்பகுதியில் இருந்து வழி தவறி கிராமத்துக்குள் நுழைந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

Update: 2022-09-06 22:13 GMT

கொள்ளேகால்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவில் உள்ளது பூரணிப்போர்டு கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டுயானைகள், புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து குட்டியானை ஒன்று தாய் யானையிடம் இருந்து பிரிந்து வழிதவறி பூரணிப்போர்டு பகுதியில் உள்ள பள்ளிக்குள் புகுந்தது. நேற்று காலை வரை அந்த யானை பள்ளி வளாகத்திலேயே நின்றது. இதை அறிந்த சிறுவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த குட்டி யானைக்கு பால், பழம் மற்றும் பிற உணவுப்பொருட்கள் வழங்கினர். பின்னர் அந்த யானையுடன் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். இதற்கிடையே எலந்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் குட்டியானையை மீட்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது:-

வனப்பகுதியில் இரைதேடிய தாய் யானையுடன் வந்த குட்டி யானை வழிதவறி கிராமத்திற்குள் வந்துள்ளது. தாய் யானையை கண்டுபிடித்து அதனுடன் குட்டியை சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. அதுவரை குட்டியானை வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தில்தான் இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்