டெல்லியில் பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுடெல்லி,
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி படித்து வந்தாள். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் வழக்கம் போல் சிறுமி பள்ளி பஸ்சில் வீட்டுக்கு சென்றாள். பஸ்சில் இருந்து திரும்பிய சிறுமி மிகவும் சோர்வாக இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அவளிடம் என்ன நடந்தது என விசாரித்தார்.
அப்போது பஸ்சில் வரும்போது சிறுமியை மூத்த மாணவர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்திய அதிர்ச்சிகர சம்பவம் தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாயின் போலீசில் புகார் அளித்தபோதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்த விவகாரம் டெல்லி மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து இது குறித்து விளக்கம் கேட்டு ரோகினி நகர போலீஸ் துணை கமிஷனருக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவனை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக அந்த மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.