கோழிக்கோடு: பீகாரை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமை படுத்திய டாக்டர் தம்பதி..!
கோழிக்கோடு அருகே 12 வயது சிறுமிக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர்.;
கோழிக்கோடு:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் முகமது கம்புரான் (வயது 41). இவருடைய மனைவி ரகுமான் (32). டாக்டர்கள். இவர்கள் கோழிக்கோடு அருகே உள்ள பந்தீர் காவு என்ற இடத்தில் கிளினிக் நடத்தி வருகிறார்கள்.
இவர்களுடைய வீட்டு வேலைகளை கவனிப்பதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்தனர். அன்று முதல் அந்த சிறுவியை தம்பதியினர் அடித்தும் உதைத்தும் வேலை வாங்கி வந்ததாக தெரிகிறது. சிறுமி வலியால் துடிப்பதை கவனித்த அக்கம் பக்கத்தினர் சில நேரம் கண்டித்து உள்ளார்கள்.
இருப்பினும் தொடர்ந்து அந்த சிறுமியை டாக்டர் தம்பதியினர் கொடுமைப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி கோழிக்கோடு குழந்தைகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறுமியை, கணவன்-மனைவி 2 பேரும் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. மேலும் சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கொடுமைப்படுத்திய முகமது கம்புரான், ரகுமான் ஆகிய 2 பேரையும் ைகது செய்தனர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.