இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத மொபைல் போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது,1200 கோடி டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்கிறது.;
புதுடெல்லி,
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92 சதவீத மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. நாம் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்கிறோம்.
புதிய தரவு பாதுகாப்பு மசோதா "மிகவும் எளிமையாகவும் நவீனமாகவும்" இருக்கும்.தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கான உரிமை, இந்தியாவில் அடிப்படை உரிமைகள். தரவுப் பாதுகாப்பு மசோதா இந்த உரிமைகளை அங்கீகரிப்பதில் மிகவும் முற்போக்கானதாக இருக்கும்.
புதிய தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். முன்னதாக, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, 2021ஐ ஆகஸ்ட் மாதம் அரசு திரும்பப் பெற்றது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப்கள் உள்ளன.இந்தியாவில் இணையதளம் திறந்தவெளியாக உள்ளது.இணையத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஜனநாயக நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும்.
2014 முதல் செமிகண்டக்டர் துறையில் இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. பாதுகாப்பும் நம்பிக்கையும் அவசியம்.ஆன்லைன் விளையாட்டு மற்றும் கிரிப்டோ கரன்சி தொடர்பான பிரச்சினைகள் சாமர்த்தியமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான சூழல் கட்டமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.