நாடாளுமன்றத்தில் இருந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்: "இது ஜனநாயகத்தின் கொலை" என்று எதிர்க்கட்சிகள் சாடல்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருவதால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.

Update: 2023-12-18 19:29 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு கும்பல் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தை இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை அளிக்க வலியுறுத்தி வரும் அவர்கள், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக அவர் பதவி விலகவும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருவதால்இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.

எனவே அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஜோதிமணி, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இருந்து கடந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய பகுதி முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்து வரும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்ற அலுவல்களை முடக்கி வருகின்றன. இது நேற்றும் தொடர்ந்தது.

மக்களவை காலையில் கூடியது முதல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா, அவையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் நிலைமை மேம்படவில்லை. எனவே பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2.45 மணி, தொடர்ந்து 3 மணி என அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையின் மையப்பகுதியில் காலை முதலே அமளியில்ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சிஎம்.பி.க்கள், ஒரு கட்டத்தில் சபாநாயகரின் மேடை மீது ஏறியும் கோஷமிட்டனர். அந்தவகையில் ஜெயக்குமார், விஜய் வசந்த், அப்துல் காலிக் ஆகிய 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகரின் மேடை மீது ஏறி கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் உள்பட 33 எம்.பி.க்கள் மாலையில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் காங்கிரஸ் அவைத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அடங்குவர். அவை 3 மணிக்கு மீண்டும் கூடியபோது இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 11 பேர், தி.மு.க. எம்.பி.க்கள் 10 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 9 பேர் அடங்குவர். மேலும் ஐக்கிய ஜனதாதளம், புரட்சிகர சோசலிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த தலா ஒரு எம்.பி.யும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நேற்றும் முடங்கியது. காலையில் 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதனால் 4 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 45 பேரை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை அவை முன்னவரான மத்திய மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து அந்த உறுப்பினர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் 11 பேர் மீது உரிமை மீறல் குழுவில் புகார் செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்த குழுவின் அறிக்கை வரும் வரை இந்த உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. மீதமுள்ளவர்கள் நடப்பு தொடரின் எஞ்சிய நாட்களுக்கு கலந்து கொள்ள முடியாது.

மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி, ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் தமிழக எம்.பி.க்கள் சண்முகம், கனிமொழி என்.வி.சோமு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒரே நாளில் 78 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 14 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 92 எம்.பி.க்கள் நடப்பு தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் கொலை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்