தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 9 புதிய வந்தேபாரத் ரெயில்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் 9 புதிய வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-09-23 23:43 GMT

புதுடெல்லி,

அதிவேகத்தில், உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசு பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 ரெயில்கள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மேலும் 9 புதிய ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயங்க உள்ளன. தமிழ்நாட்டில் நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் இந்த 9 ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மதியம் 12.30 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

நெல்லை-சென்னை வழித்தடம் தவிர உதய்பூர்-ஜெய்ப்பூர், ஐதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை(ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-ஆமதாபாத் ஆகிய வழித்தடங்களில் புதிய ரெயில்கள் இயங்க உள்ளன. இதன்மூலம் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் பயன்பெறுகிறது.

வழிபாட்டு தலங்களை இணைக்கிறது

மேற்கண்ட வழித்தடங்களில் தற்போதுள்ள அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி ரெயில் மற்றும் காசர்கோடு-திருவனந்தபுரம் ரெயில் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும். ஐதராபாத்-பெங்களூரு ரெயில் 2½ மணி நேரமும், நெல்லை-மதுரை-சென்னை ரெயில் சுமார் 2 மணி நேரமும், ராஞ்சி-ஹவுரா ரெயில், பாட்னா-ஹவுரா ரெயில் மற்றும் ஜாம்நகர்-ஆமதாபாத் ரெயில் ஆகியவை சுமார் 1 மணி நேரமும், உதய்ப்பூர் - ஜெய்ப்பூர் ரெயில் சுமார் அரைமணி நேரமும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களைவிட வேகம் கொண்டதாக இருக்கும்.

இந்த ரெயில்கள் பூரி ஜெகநாதர், திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி கோவில் போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்