உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 9½ கிலோ தங்க நகைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 9½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-11 18:45 GMT

சிவமொக்கா:

கர்நாடகத்தில் அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சிவமொக்கா டவுன் காந்தி பஜார் பகுதியில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடைக்கு ஒரு நபர் பெரிய பையுடன் மர்மமான முறையில் வந்ததாக சிவமொக்கா டவுன் கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காந்தி பஜார் எலேரேவண்ணா வீதியில் உள்ள அந்த நகைக்கடைக்கு சென்றனர்.

அவர்கள் நகைக்கடை உரிமையாளர் லட்சுமண் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் 9 கிலோ 565 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை பையில் வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் அவற்றுக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து 9 கிலோ 565 கிராம் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5.83 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்