83 சதவீத 'முத்ரா' கடன்கள், தலா ரூ.50 ஆயிரத்தை விட குறைவானவை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
83 சதவீத ‘முத்ரா’ கடன்கள், தலா ரூ.50 ஆயிரத்தை விட குறைவானவை. இதை வைத்து எப்படி வியாபாரம் செய்ய முடியும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
சிறிய தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம்வரை கடன் வழங்கும் 'முத்ரா' திட்டம் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முத்ரா திட்டத்தில், 40 கோடியே 82 லட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.23 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது மனதை கவரும்படி இருக்கலாம். ஆனால், இதில் 83 சதவீத கடன்கள், தலா ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது, ரூ.19 லட்சத்து 25 ஆயிரத்து 600 கோடி கடன்கள், ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவாகவே அளிக்கப்பட்டுள்ளன. இன்றைய காலத்தில், இந்த தொகையை கொண்டு என்ன வியாபாரம் செய்ய முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.