ஆந்திராவின் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி

ஆந்திராவின் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-07-30 17:46 GMT

கோப்புப்படம்

குண்டூர்,

இந்தியாவில் கடந்த 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 35 வயதான குரங்கு அம்மை பாதித்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனிடையே இந்தியாவில் பல நகரங்களில் குரங்கு அம்மை தொற்றுக்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவின் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதுதொடர்பாக குண்டூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுமையா கான் கூறுகையில், "இது குரங்கு அம்மை தொற்றாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்துவதற்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் செகந்திராபாத் காந்தி மருத்துவமனைக்கு மாதிரிகளை நாங்கள் அனுப்பி உள்ளோம்" என்று தெரிவித்தார்.

அதில் வரும் அறிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு, சிறப்பு வார்டில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்