கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை

கத்தாரில் விடுதலை செய்யப்பட்ட 8 வீரர்களில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர்.;

Update: 2024-02-12 07:16 GMT

புதுடெல்லி,

கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்களான நவ் தேஜ் சிங் பால், சவுரப் வலிந்த், பூர்ணேந்து திவாரி, பிரேந்திர குமார் வர்மா, சுகுணகர் பகவுலா,சஞ்சீவ் குப்தா, அமித்நாக் பால் மற்றும் ராகேஷ் ஆகிய 8 பேர் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் 8 பேரும் கத்தாரில் செயல்பட்டு வந்த நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் கத்தார் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர்களின் தண்டனையை குறைக்க இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால், அவர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும் அவர்களை விடுவிப்பதற்காக இந்திய வெளியுறவு துறை கத்தார் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

இந்நிலையில், 18 மாதங்களுக்கு பிறகு 8 வீரர்களை கத்தார் அரசு தற்போது விடுதலை செய்துள்ளது. அதன்படி, விடுதலை செய்யப்பட்ட 8 வீரர்களில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர். ஒருவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அவரும் விரைவில் நாடு திரும்புவார் என்று இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

டெல்லி விமான நிலையம் வந்த முன்னாள் வீரர்களில் ஒருவர் கூறியதாவது, "பிரதமர் மோடியின் தனிப்பட்ட தலையீடால் மட்டுமே நாங்கள் தாயகம் திரும்புவது சாத்தியமானது. இந்திய அரசின் தொடர் முயற்சியினாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்