நாள்தோறும் 8 குழந்தைகள் கடத்தல்: தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டில் சராசரியாக நாள்தோறும் 8 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
கடந்த ஆண்டு, 2 ஆயிரத்து 189 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டைய விட 27.7 சதவீதம் அதிகம். தெலுங்கானா, மராட்டியம், அசாம் ஆகிய மாநிலங்களில் அதிகமான கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் 6 ஆயிரத்து 533 பேர் கடத்தப்பட்டனர். அவர்களில் 2 ஆயிரத்து 877 பேர் குழந்தைகள் ஆவர். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பாலியல் தொழில், பிச்சை எடுத்தல் ஆகிய சுரண்டல்களுக்காக கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்ட 6 ஆயிரத்து 533 பேரில் 6 ஆயிரத்து 213 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தல் தொடர்பாக 5 ஆயிரத்து 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.