7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜனதா 4 இடங்களில் அமோக வெற்றி
7 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. லாலு கட்சி, சிவசேனா, டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.;
புதுடெல்லி,
நாட்டின் 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தரபிரதேசம்) மற்றும் முனுகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி, . ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரசுடன் கரம் கோர்த்துக்கொண்டு அங்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் மீண்டும் அரசு அமைத்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் 2 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றன.
அதே போன்று மராட்டிய மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா கட்சி பிளவுபட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஆதரவைப் பெற்று பா.ஜ.க.வுடன் கரம் கோர்த்து அங்கு புதிய அரசை அமைத்தது. முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே பதவி இழந்து, புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். அங்கு அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் போட்டியில் இருந்து பா.ஜ.க. கடைசியில் விலகியதால் சுவாரசியம் குறைந்தது. 7 தொகுதி இடைத்தேர்தலில் மிகக்குறைவாக வாக்குப்பதிவானது இங்குதான்.
பா.ஜ.க.வுக்கு 4 இடம்
7 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
7 தொகுதிகளில் 4 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், சிவசேனா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தில் வெற்றியை ருசித்துள்ளன.
முழு விவரம்
* பீகாரில் மோகாமா தொகுதியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தகுதியிழப்பு செய்யப்பட்டதால், இடைத்தேர்தல் நடந்தது. இங்கு ஆனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவி, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் சோனம் தேவியை 16 ஆயிரத்து 741 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
பீகாரில் மற்றொரு தொகுதியான கோபால்கஞ்சில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுபாஷ் சிங் மரணத்தால் இடைத்தேர்தல் நடந்தது. பா.ஜ.க. சார்பில் களம் இறங்கிய அவரது மனைவி குசும் தேவி வெற்றி பெற்றுள்ளார். இவர் ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளர் மோகன் குப்தாவை 1,794 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
* உத்தரபிரதேச மாநிலம், கோலகோகர்நாத் தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் கிரி மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு அரவிந்த் கிரியின் மகன் அமான் கிரி பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 34 ஆயிரத்து 298 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட சமாஜ்வாடி கட்சி வினய் திவாரி தோல்வியைத் தழுவினார்.
* அரியானா மாநிலத்தில் ஆதம்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் பா.ஜ.க.வுக்கு தாவி, பதவி விலகினார். இங்கு அவரது மகன் பாவ்யா பிஷ்னோய் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷை 15 ஆயிரத்து 740 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
'நோட்டா' அசத்தல்
* மராட்டிய மாநிலத்தில், அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால், இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் அவரது மனைவி ருதுஜா லட்கே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பில் போட்டியிட்டு, 66 ஆயிரத்து 530 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் யாருக்கும் ஆதரவைத் தெரிவிக்காத 'நோட்டா'வுக்கு கிடைத்துள்ளன. நோட்டா' வுக்கு கிடைத்த வாக்குகள் 12 ஆயிரத்து 806 ஆகும்.
வேட்பாளர்களில் ருதுஜா லட்கேவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை சுயேச்சை வேட்பாளரான ராஜேஷ் திரிபாதி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 1571 ஆகும்.
* ஒடிசாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிஷ்ணு சேதி மரணம் அடைந்ததால், தாம்நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அவரது மகன் சூரிய வன்ஷி சூரஜ் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தனக்கு அடுத்தபடியாக வந்த பிஜூஜனதாதளம் வேட்பாளர் அபந்தி தாசை 9 ஆயிரத்து 881 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
* தெலுங்கானாவில் முனுகோடே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகோபால் ரெட்டி, பா.ஜ.க.வுக்கு தாவி, பதவி விலகினார். எனவே அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அவர் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டு தோல்வி அடைந்தார். இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) வேட்பாளர் கூசுகுண்ட்லா பிரபாகர் ரெட்டி 9 ஆயிரத்து 146 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.